தில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், இந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது